Sunday, August 15, 2010

பதில் கேட்டேன், படி!
பூபாளம் கேட்கிறது முருகா
பொழுதெப்போ விடியல் வரும் முருகா?
ஆகாரம் போது மென்று முருகா
அனைவருமே சொல்லும் நிலைக்கருள்தா!

வீணான வார்த்தைகள்தான் அதிகம்
மீட்டெடுக்க யார்படிப்பார் பதிகம்?!
போனாயோ நல்லூரைவிட்டு - நீயும்
பொறுப்பின்றிப் போனாயோ கெட்டு!!???

பாவிகள்தான் நாமெல்லாம் உண்மை
பார்த்திருத்தோம் வாசலிலே உன்னை
தேவியுடன் உன் பொழுது என்றால் - நீ
தேவையில்லை எங்களுக்கு கந்தா!

Saturday, April 19, 2008

மஞ்ச வனப்பதி முருகன்

பல்லவி
கொக்குவிலை விரும்பி வந்தான் குமரன்
குளிர் சோலை மஞ்ச வனப்பதி முருகன்

அனுபல்லவி
தந்தைக்கே பொருள் சொன்ன தலைவன் - அழகு
தமிழுக்கே உயிர் தந்த முருகன்

சரணங்கள்
அழகான நந்தவனம் உண்டு அருகில்
அருள் பாயும் திருக் கேணி உண்டு
உலகாள உயர் கோபுரம் உண்டு -உன்
உயிரான தமிழ் மகளும் உறவாக உண்டு

கடம்ப மர நிழல் விரும்பும் முருகா -எம்
கதிவினையை தீர்த்துவிட அருள் தா
திடம் பட நம் நெஞ்சுகளில் வருவாய்
திரு முருகா அருளிட வா குரு வாய் !

Wednesday, March 12, 2008

நமை ஆளும் நல்லுரான்!

பல்லவி
நல்லுரின் புகழ் தென்றல் பாடும் - அந்த
நாதத்தில் மன ஊக்கம் கூடும் -( எங்கள்)

அனுபல்லவி
கல் ஊறும் நீராகும் மனது - அன்பில்
கசிகின்ற போது என் கனவிலும் உன் நினைவு !

சரணம்

தேர் அடியின் மகிமை அது பெரிது -வான
தேவர்க்கும் கிட்டாத சிறப்பு இது அரிது
பார் அடியில் மணலும் அது வெண்மை - இனி
பற்றி விடும் எம் இதயம் உன்னை !
.
கேணி அதன் காற்றில் சுகம் நூறு - நாம்
கேட்பது எம் சிந்தையிலே அறிவு அதன் சாறு -தண்ட
பாணி நீ கண்டது மெய்ஞானம் - அதில்
பாதி யாகிலும் நீ தர வேணும் !
.
நேரத்தில் வழு ஏதும் இல்லை - பூசை
நியமத்தில் தவறேதும் இழையாத பிள்ளை
கூறுந்தன் மொழி என்ன எமக்கு - உன்
குமிண் சிரிப்பு வழி காட்டும் நமக்கு !

Friday, March 7, 2008

கதிர்காமம்

பல்லவி
மயில் அகவ விடிகின்ற கதிர்காமம் - கதிர
மலையினிலே வேல் கண்டால் மனம் ஆறும்

அனுபல்லவி
துயில்கின்ற பொழுதெல்லாம் உன் காவலே- விடியல்
துவங்கிடவே கூவுவது உன் சேவலே

சரணம்
கதிர்காம முருகா நீ முகம் காட்டிடு- எங்கள்
தலை ஏறி பழவினைகள் தனை ஒட்டிடு
குற வள்ளி தனை சேரும் அழகானவன் - தேவ
குளம் வாழ படை கொண்டு அமர்ந்தான் இவன்

அடியாரோடுஅடியாராய்வாழ்கின்றவன்- சூரன்
அகம் பாவம் தனை போக்க வேல் கொண்டவன்
வடிவேலன் அருள் ஆட்சி கதிர்காமத்தில் - அன்பு
வரவேணும் என் மீதும் அருள் கூருவை

நல்லூரன்

பல்லவி
அழகென்ற பொருள் கொண்ட அருளாளனே-நல்லை
அமர்ந்தெம்மை ஆள்கின்ற மணவாளனே
.
அனுபல்லவி
பொழுதெல்லாம் உனை பாடும் வரம் வேண்டுமே - உந்தன்
புகழ் பாடி சுகம் காணும் திறன் வேண்டுவேன்
.
சரணம்
மணி வாயில் திறந்துந்தன் உரு காட்டினாய் - என்
மன வாயில் புகுந்தின்று அருள் கூட்டினாய்
அணியாகும் திருக்கேணி அமர்கின்றவன் - தமிழின்
அழகாலே குளிர் பழனி ஆண்டவன் இவன்
.
நல்லுரின் மணி கேட்டு யாழ் நகரம் எழும்பும்
நல்லதெனபூவிருந்து வண்டுகளும் அலம்பும்
எல்லோரும் வாழ்வதற்கு எழில் முருகா அருள் தா
என் கவிதை வரிகளிலே நீ உறை வாய் பொருளாய்